தினம் தினம் புதைந்துக் கொண்டிருக்கிறோம்
முள்வேலிகளுக்குள் ,
கோப்பையும் . குதூகலமுமாய்
உங்கள் மைதானம் . . . !!!!

கம்பிகள் மறைத்தது போக
மீதம் தெரியும்
இடைவெளிகளின் வழியே,
நேர்க்கோட்டில்
விரிகிறது எங்கள் உலகம் . . . !!!
நீங்கள் அடிக்கும் பந்துகள் கூட
கட்டிடங்களை கடந்துச் செல்கின்றன,
இவ் இரும்பு கோடுகளை
சற்றே தாண்டி கூட சென்றது இல்லை
எம் கரங்கள் . . . !!!
விசிலும் ஆராவாரமுமாய் . . .
உம் ஆட்டங்கள் ,
வீழ்ந்துப்போன வாழ்க்கையினை,
கற்பனை செய்துக் கொள்கிறோம்
எம் பழமை நினைவுகளில் . . . !!!
உடலெங்கும் கொடியின்
வர்ணம் பூசி கொண்டாடுகிறது உலகம் ,
அவர்கள் ஏற்படுத்திய
எங்கள் நிர்வாணங்களை மறந்து விட்டு . . . !!!
விடை கிடைக்காமல் நசுங்கிப் போய்கிடக்கிறோம் ,
எங்கள் வலிக்காக போராடிய
அண்ணன்களும் ,
அரக்கனின் வருகையையொட்டி
சிறையில் . . . !!!
இரண்டாண்டாகியும்
இன்னமும் வரவில்லை,
கடைவீதிக்கு சென்ற
தம்பியும் , தமக்கையும் . . . !!!
பால் கிடைக்காமல்
இறந்துப் போன கடைசித் தம்பியின்
முதலாம் ஆண்டு நினைவும்
சில தினங்களில் . . . !!!
அப்பா
ஊருக்கு போயிருப்பதாய்
பல ஆண்டுகளாக
தினம் இரவினில்
எங்களுக்கு ஆறுதல் சொல்லி
உணவு ஊட்டும் அம்மா.....
கண்டதுண்டு ,
ஆமிக்காரன் அடிக்கும்
பாட்டரி வெளிச்சங்களில்.
அவளின் கண்ணீர் நனைத்த விழிகளையும் ,
துடைத்து நசிந்த
முந்தானையையும்.
யார் சொன்னது உங்களுக்கு இதயமில்லை ,
இரக்கமில்லையென்று ???!!
இதோ தயாராகிவிட்டீர்கள்
நிரப்பப்பட்ட
கோலா பாட்டில்களுடன்
ஐ.பி.எல். காக . . .
எங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுவதை மறக்க
ஏதேனும் ஒரு போதை தேவையாயிற்றே
உங்களுக்கு. . . இப்படியாக நினைத்துக் கொள்கிறோம் !!!
எங்களைப் பற்றிய கவலைகள் உங்களுக்கெதுக்கு ??!
இதோ.....
உணர்வுடன் கத்த துவங்கிவிட்டனர்
ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனும் ,
காலியான உணவுக் கோப்பைகளுடன்
உணவின்றி கிடக்கிறோம் ,
கோப்பை வாங்க தயாராக நீங்கள் . . . !!!
~ எழிலன் ~
No comments:
Post a Comment