நானாகிய நான்......

. . . தேவை ஒரு சுதந்திரம் . . .

ஜனநாயகம் …

இவ்வார்த்தையே அர்த்தமற்று போய்விட்டது பாரதத்தில்…
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், ஜனங்களுக்கு பஞ்சமில்லை. ஜனங்களின் உரிமைகளுக்கே பஞ்சம்…

ஜனநாயகத்துக்கு உருவமில்லை. அது ஒரு உணர்வு. உணர்வுள்ள வாழ்வு. உரிமையுள்ள, உணர்வுள்ள வாழ்வு…

உணர்வுகள் மறுக்கப்படும் போதும், மிதிக்கப்படும்போதும், அடிப்பட்டவர்களாய் ஜனநாயகத்துக்கும், அதை ஆளும் சக்கரவர்த்திகளுக்கும் எதிராய் குரல் கொடுக்கிறோம். என் இனம் பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதே அக் குரலின் ஒட்டு மொத்த சக்தி…

2009 …

அறிவியல் ஆளுமையை வளர்த்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், மக்களின் அரிய உயிருக்கு பாதுகாப்பு ஏது ??!. ஊரேங்கும் இருள் கவ்வும் மின்சாரம் இல்லா வேளையில், மக்களின் பிரதிநிதி வீடு மட்டும் மின்னொளியில் மின்னுவது சிறப்பன்று… பாரெங்கும் பசி, பட்டினிப்போர் நிகழும் வேளையில் மக்கள் பிரதிநிதி பரணியெங்கும் பயணம் செய்வது எவ்வகையில் சிறப்பு ??! .

மக்களாய்ப் பார்த்து, மக்களில் ஒருவரை அரியணை ஏற்றுவதே ஜனநாயகத்தின் சிறப்பு… அரியணை ஏறியதும் அவனே தம் மக்களை வதைப்பது எவ்வகையில் சிறப்பானது…??!

ஓட்டு கேட்டு வரும் ஓநாய் கூட்டம், கன்றுத் தோல் போர்த்தி வரும்.
அரியணை ஏறி, வேடம் களைத்து, வேட்டையைத் தொடங்கும்.
பண வேட்டை, எதிரியின் உயிர் வேட்டை…. சிறந்த ஜனநாயகம்…
மக்களின் நலத்திட்டங்களுக்காக, பாலங்களாகவும், பள்ளிக்கட்டிடங்களாகவும் வேண்டிய பணம், பிரதிநிதியின் பயணச்செலவுக்கும்,
புது வீடு கட்டவும் பயன்படுவது மிகச்சிறப்பாய் உள்ளது…

1947 – ல் சுதந்திரத்தை மாற்றானிடமிருந்து வேண்டிப் பெற்றொம்.

2008 - ல் நம்மில் ஒருவனிடமே சுதந்திரத்தையும், அதன் குழந்தைகளான உரிமைகளையும், அதன் உணர்வுகளையும் இறைஞ்சுகிறோம்.
மக்கள் சேவகர்கள் என மார் தட்டிக்கொள்ளும் இந்நாள் மன்னவர்களே… பொறுத்திருங்கள்… இம்மண்ணுக்குத்தேவை மற்றுமொரு சுதந்திரம் ! மாற்றானிடமிருந்து அல்ல, மக்களை மறந்த, அவர்களின் உரிமைகளை மறுத்த, உங்களைப் போன்ற மகா கயவர்களிடமிருந்து !

இளைஞர்களிடையே ஒளிந்திருக்கும் சே குவேராக்களும், சந்திர போஸ்களும், பகத்சிங்களும், பிரபாகரன்களும், பெரியார்களும், முத்துகுமார்களும்
விழிக்கும் நாள், இம்மண்ணுக்கு சுதந்திரம் ! உங்கள் இரத்தக்கறை ஆட்சிக்கு முடிவுரை எழுதும் மாணவ சமுதாயம் உதிக்கும் நாள், உங்களுக்கு அறுதியிட்டுக் கூறப்படும் இறுதி நாள்…

‘ புரிந்து கொள் ! சீக்கிரம் திருந்திக்கொள்…! ‘ எங்கள் உரிமையை வாழவிடு…!

எங்களின் காதல் உங்களைப்போல் காசின் மீதல்ல…
களங்கமில்லா இத்தேசத்தின் மீது…!
அதை கற்பழிக்கும் உங்களைப்போன்ற இனத்துரோகிகளை தோலுரிக்க புறப்படும் இன்னொரு போஸின் சுதந்திரப் படை….

தேவை மற்றுமொரு சுதந்திரம்…! புரட்சிக்குப் பஞ்சம்…!!

இன்னும் வரும் ....

- ' இளம் புலி ' எழிலன் >